குறும்படப்போட்டி முடிவுகள்

•July 26, 2007 • 1 Comment

நண்பர்களே!

கானம் கலையகமும், நண்பர்கள் சிலரும் இணைந்து நடாத்திய குறும்படப் போட்டியில் கலந்து கொள்ள சுமார் 24 பேர்கள் விண்ணப்பித்திருந்தபோதும், போட்டிக்கான முடிவுத்திகதி பிற்போடப்பட்டிருந்த போதும், போட்டிக்கு ஆறு பேர்களின் படைப்புக்களே கிடைத்தன.

அவற்றிலும் இரு படைப்புக்கள் போட்டி விதிகளுக்கமைவாக இல்லாத காரணத்தினால் நிரகாரிக்கப்பட்டது. போட்டிக்குக் குறைவான படைப்புக்களே வந்திருந்த போதும்,  வந்திருந்த படைப்புக்கள் அனைத்தும் சுட்டிய கருப்பொருள்கள் எம்மை அசர வைத்ததென்றே சொல்லவேண்டும்.

இளைஞர்களிடத்தில் இத்துணை சமூக அக்கறை இருக்குமா எனக்கேட்பவர்களை,  திணறடிக்கும் வண்ணம் தங்கள் படைப்புக்களைத் தந்திருந்தார்கள். பங்கு பற்றிய அனைவர்க்கும் பாராட்டுக்களும், நன்றிகளும்.
           
போட்டிக்கு வந்த படைப்புக்கள் குறைவாக இருந்ததாலும், வந்த படைப்புகள் அனைத்தும், ஏறக்குறைய ஒரே தன்மையில் இருந்தமையாலும், போட்டியில் கலந்து கொண்ட நான்கு படைப்புக்களையும்  சஹாரப் பூக்கள்,
   வீதியில் இசைத்தாலும்,  பகை,           எல்லைவரை தொட்டுச்செல்ல  பரிசுக்குரியதாகத் தெரிவுசெய்துள்ளோம் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். படைப்புக்கள் குறித்த எங்கள் கருத்துக்களை அந்தந்த இணைப்புப் பக்கங்களிலே தந்துள்ளோம்.படைப்புக்களுக்களை பார்வையிடும் நீங்களும் உங்கள் கருத்துக்களையும்,  வழங்கி, படைப்பாளிகளை உற்சாகப்படுத்த வேண்டுகின்றோம்.
         
முதல்முறையாக எம்மால் ஒழுங்கு செய்யப்பட்ட போட்டியில், எம் சக்திக்கு அப்பாற்பட்ட தாமதங்களும், தொடர்பாடற் குறைபாடுகளும், இருந்ததை அறிவோம். இனிவரும் காலங்களில் இது குறித்து அக்கறையுடன் செயற்படுவோம் என்பதை அறியத்தருகின்றோம். இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதோடு, படைப்பாளிகளுக்கான கெளரவப் பரிசில்கள், காலக்கிரமத்தில் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை அறியத் தருகின்றோம். உங்கள் ஆர்வத்துக்கு  நன்றி  

      குறும்பட ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு
            குறும்படத்துறை சார்ந்து மேலும் பலர் ஆர்வம் காட்டி வருவதால், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கொருமுறை,  புதிய தலைப்புக்களில் இப்போட்டியினைத் தொடர்ந்து நடாத்த எண்ணியுள்ளோம். இதற்கான அறிவிப்பு வெகுவிரைவில் அறியத்தரப்படும்

–  கானம் கலையக நண்பர்கள் –

Advertisements

சஹாராப் பூக்கள்

•July 25, 2007 • 6 Comments

தலைப்பு: சஹாராப் பூக்கள்

இயக்கம்: கேசஹி

வதியும் நாடு:  இலங்கை

போட்டியில் கலந்து கொண்ட ஒரேயொரு பெண் படைப்பாளி.  வந்த படைப்புக்களில் மிகநல்ல காட்சிப்படுத்தல், தொகுப்பு, இயக்கம், என்பனவற்றில் எம் எதிர்பார்புக்கேற்றவகையில் இருந்தது இப்படைப்பு. இதன் ஒலிப்பதிவில் இருந்த குறைபாடும்,  இது பேசிய பேசுபொருள் ஏலவே பல தடவைகள் பேசப்பட்டிருந்தமையாலுமே இப்படைப்பு பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறது.

கேசஹி!

உங்களிடமுள்ள திறமைக்கு இதுவொரு முதல் அடியெடுப்பே.  உங்களைத் தவிரவும், உங்களிடம் நல்லதொரு இயங்குகுழு இருக்கிறதென்பதையும், உங்கள் படைப்பு அடையாளப்படுத்துகிறது.  ஆகவே அந்த நண்பர்களோடினைந்து,  மேலும் பல சிறப்பான படைப்புக்களைத் தர வேண்டுகின்றோம்.  போட்டியில் கலந்து கொண்ட உங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள். மேலும் தொடர வாழ்த்துக்கள்.

வீதியில் இசைத்தாலும்

•July 25, 2007 • 1 Comment

தலைப்பு: வீதியில் இசைத்தாலும்

இயக்கம்:  இன்பா

வதியும் நாடு: அமெரிக்கா

இப்படம் பதிவு செய்துள்ள காட்சிகள், நாம் அன்றாடம் தெருவில் காணும் காட்சிகள்தான். ஆனால் அவற்றுக்குள்ளும் ஒரு அர்த்தம் இருக்கிறது, வாழ்வு இருக்கிறது என்பதைச் சுட்ட விரும்புகிறார் இயக்குநர்.  ஆனால் காட்சிகளின் தொகுப்பாக்கத்தில் உள்ள குறை பாட்டினால், அது செழுமைப்படவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.

இன்பா!

நீங்கள் சொல்ல வந்த கருப்பொருள், உங்களிடம் நிறைந்திருக்கும் நேய உணர்வினையும், சூழலின் அவதானிப்பையும் தெளிவாகக் காட்டுகிறது. ஒரு படைப்பாளியிடம் முதலில் இருக்க வேண்டிய தகமையது எனச் சொல்லலாம். அந்த வகையில் நீங்கள் இன்னமும் நிறையவே, நிறைவாகவே பல படைப்புக்களைத் தரமுடியும். போட்டியில் கலந்து கொண்ட உங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள். மேலும் தொடர வாழ்த்துக்கள்.

பகை

•July 25, 2007 • 13 Comments

தலைப்பு:  பகை

இயக்கம்: யெஸ். பாலபாரதி

வதியும்நாடு:  இந்தியா

போட்டிக்கு நாம் அறிவித்திருந்த நேரம் ஓரு நிமிடம் ( 60 செக்கன்கள்). ஆனால் 44 செக்கன்களுக்குள் ஒரு சமூகப்பிரச்சனையை சிறப்பாகப் படமாக்கியிருந்தமைக்காக எங்கள் குழுவினரின் பாராட்டுக்கள்.  இது தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட படம்.  அதன்காரணமாகவே, பதிவாக்கலில் சிறு தளம்பல்கள் தெரிகிறது. மற்றும்படி அனைத்தும் பாராட்டத் தக்கவண்ணமேயுள்ளன.

பாலா!

இவ்வளவு சிறப்பாக உங்கள் எண்ணங்களைச் சொல்ல முயன்றிருக்கும் உங்கள் முயற்சி திருவினையாக்கட்டும்.  இந்த முதல் முயற்சி உங்களுக்கு நல்ல ஒரு ஆரம்பமாக அமையட்டும்.  இனிவருங்காலங்களில் மேலும் பல சிறப்பான படைப்புக்களை உங்களிடமிருந்து எதிர் பார்க்கின்றோம். போட்டியில் ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தமைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

எல்லைவரை தொட்டுச்செல்ல

•July 23, 2007 • 3 Comments

தலைப்பு:  எல்லைவரை தொட்டுச்செல்ல 

இயக்கம்:  சாரா

வதியும்நாடு:  மலேசியா

போட்டியில் கலந்து கொண்டவர்களில்,  இள வயதுப் போட்டியாளரின் படைப்பிது.   பேசுபொருள்,  இசைக்கோப்பு, என்பன கச்சிதமாகப் பொருந்திவருகிறது.  ஆனாலும் காட்சிப்படுத்தலில் இன்னும் சற்றுக் கவனமெடுத்திருந்தால் மிக நல்ல படைப்பாக வந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சாரா!

ஆர்வத்துடன் பங்கு கொண்டமைக்கான பாராட்டுக்களையும், இதே ஆர்வத்துடன், மேலும் சிறப்பான படைப்புக்களைத் தர வேண்டுமெனும்  விருப்புடனான வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.